
ஜெ.வெங்கட்ராமன். டெல்லி. 1.8.14.
தமிழக மீனவர் விவகாரத்தில் இனி மத்திய அரசிடம் இருந்து எந்த சலுகையும் பெற முடியாது என்று அந்த கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு இருப்பதாகவும் இனி தமிழக அரசால் இலங்கை அரசை மிரட்ட முடியாது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
கடித தந்திரத்தை கைவிட்டுவிட்டு , இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது.
இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது, அந்த படகுகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா ? என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதால் தான் இது போன்ற கைது நடவடிக்கைகள் தொடருவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வெள்ளிக் கிழமை எதிரொலித்தது .ராஜ்யசபாவில் அதிமுக கட்சியின் தலைவர் டாக்டர் மைத்ரேயன் , தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மற்றும் நகர மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் அவதூறாக விமர்சனம் செய்யப்பட்டது குறித்து இலங்கையிடம் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என டாக்டர் மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.
இந் நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரையை வெளியிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது இலங்கை அரசு. இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தங்களது அனுமதி இல்லாமல் அந்த கட்டுரை வெளியாகிவிட்டது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.